பிரதான செய்தி

மட்டு.குருக்கள்மடம் ஸ்ரீ சத்ய சாய் சஞ்ஜீவனி வைத்தியசாலைக்கு அலிஷாஹிர் மௌலானா MP விஜயம்.

(உமர் அறபாத்)

கிழக்கில் மனிதாபிமான அடிப்படையில் எவ்வித இன மத பேதங்களும் இன்றி இருதய நோய் தொடர்பான சிகிச்சைகளை எவ்வித கட்டணங்களும் இன்றி முற்றிலும் இலவசமாக வழங்கி வருகின்ற மட்டக்களப்பு – குருக்கள்மடம் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ சத்ய சாய் சஞ்ஜீவனி வைத்தியசாலையின் உயர்தர சேவைகளை பாராட்டும் வகையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா அவர்கள் நேற்று வியாழக்கிழமை அங்கு நேரடி விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார் –

இந்தியாவை சேர்ந்த சத்குரு ஶ்ரீ மதுசன் சாய் அவர்களது ஏற்பாட்டிலும் வழிகாட்டலிலும் செயலாற்றும் குறித்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும் பொது வைத்திய நிபுணருமான Dr. சுந்தரேசன் , மற்றும் வைத்தியசாலையின் முகாமைத்துவ பணிப்பாளரும் இந்தியாவை சேர்ந்த வைத்தியருமான ரமேஷ் ராவ் தலைமையிலான குழுவினரால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருத நோய் சிகிச்சை பிரிவின் வைத்திய நிபுணர்கள் ஊழியர்களுடன் இணைந்து எமது பிரதேச மக்களுக்கு பேதங்கள் எதுவும் இன்றி அனைவரும் மனிதர்கள் எனும் அடிப்படையில் ஆற்றி வருகின்ற மகத்தான பணிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் சார்பிலும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதி எனும் அடிப்படையிலும் தனது நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொண்டார்கள்.

அத்துடன் ஶ்ரீ சத்ய சாய் சஞ்ஜீவனி வைத்தியசாலையின் நாளாந்த மனிதாபிமான மருத்துவ சேவைகள் மற்றும் அதி நவீன வசதிகள் கொண்டதாக அமையப்பெற்றுள்ள இருதய நோய் சத்திர சிகிச்சை கூடம் என்பவற்றையும் பார்வை இட்டார்கள் –

இதன்போது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr. சுந்தரேசன் , பணிப்பாளர் Dr. ரமேஷ் ராவ், வைத்தியசாலையின் நிருவாக அதிகாரி பிரதீபன் , கதிரியல் பிரிவு உத்தியோகத்தர் இக்ராம் , உட்பட வைத்தியசாலையின் தாதியர்கள் , ஊழியர்கள் பிரசன்னமாகி இருந்தனர்.

சுமார் 450 மில்லியன் பெறுமதியான நவீன இயந்திரத்துடன் சுமார் 1500 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டு
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் முற்றிலும் இலவசமாக இருதய நோயாளர்களின் நலன்கருதி சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதுடன் இதுவரை சுமார் 700 இற்கும் அதிகமான இருதய நோயாளர்களுக்கு அஞ்சியோ சோதனைகள் , மற்றும் அவர்களது இருதய செயற்பாட்டிற்கு அவசியமான ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது

அத்துடன் விரைவில் பெரியவர்களுக்கான இருதய சத்திர சிகிச்சைகள் எவ்வித கட்டணங்களும் இன்றி முற்றிலும் இலவசமாக முன்னெடுக்கப்பட உள்ளதுடன் , ஏற்கனவே 9 குழந்தைகளுக்கு இருதய அறுவை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.

முன்னர் கிழக்கை சேர்ந்த நோயாளர்கள் கொழும்பு , யாழ்ப்பாணம் , பொலன்னறுவை போன்ற தூரப் பிரதேசங்களுக்கு பயணித்து குறித்த சிகிச்சையினை சிரமங்களுடன் சென்று அரச வைத்தியசாலைகளில் பெற்று வந்த அதேவேளை பல இலட்சங்கள் செலவில் தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொண்டு வந்த நிலையிலேயே இப்பகுதி மக்களுக்காக குறித்த இலவச வைத்திய சேவை ஶ்ரீ சத்ய சாய் சஞ்ஜீவனி வைத்தியசாலையின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பித்தக்கது.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button