Sportsபிரதான செய்தி

328 ஓட்டங்களால் வென்ற இலங்கை.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் பங்களாதேஷின் சில்ஹட்டில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரின் 1ஆவது போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் 4ஆவது நாளான இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 47 ஓட்டங்கள் என தொடர்ந்த பங்களாதேஷ் அணி பகல் போசணத்தைத் தொடர்ந்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 182 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (22) ஆரம்பமான இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதற்கமைய முதலில் தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, ஏற்கனவே இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 280 ஓட்டங்களை பெற்றது.

இதில் தனஞ்சய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தலா 102 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.

பங்களாதேஷ் அணி சார்பில் காலித் அஹமட் மற்றும் நஹிட் ரானா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 188 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

பங்களாதேஷ் சார்பில் அதிகபட்சமாக தைஜுல் இஸ்லாம் 47 ஓட்டங்களையும், லிட்டன் தாஸ் 25 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இலங்கை அணி 92 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருந்தது.

இரண்டாவது இன்னிங்ஸிலும் தனஞ்சய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் இணைந்து பெற்ற சாதனை இணைப்பாட்டத்தின் மூலம் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷுக்கு 511 ஓட்ட வெற்றி இலக்கை நிர்ணயித்தது.

இலங்கை அணி சார்பில் கமிந்து மெண்டிஸ் 164 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 108 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் மெஹ்தி ஹஸன் மிராஸ் 4 விக்கெட்டுகளையும், தைஜுல் இஸ்லாம் மற்றும் நாஹிட் ரானா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அந்த வகையில் 511 எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 182 ஓட்டங்களை பெற்றது.

பங்களாதேஷ் அணி சார்பில் மொமினுல் ஹக் ஆட்டமிழக்காது 87 ஓட்டங்களையும், மெஹ்தி ஹஸன் மிராஸ் 33 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டமாக பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் கசுன் ராஜித 5 விக்கெட்டுகளையும், விஷ்வ பெனாண்டோ 3 விக்கெட்டுகளையும், லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அந்த வகையில் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1 – 0 என முன்னிலை வகிக்கின்றது.

போட்டியின் நாயகனாக, தனஞ்சய டி சில்வா தெரிவானார்.

ICC உலக டெஸ்ட் சம்பியன்ஸிப் தொடருக்கான இப்போட்டியில் வென்ற இலங்கை அணி 12 புள்ளிகளைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இத்தொடரின் 2ஆவது போட்டி எதிர்வரும் மார்ச் 30ஆம் திகதி சட்டொகிராமில் இடம்பெறவுள்ளது.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button