இந்தத் தடை நீக்கப்பட வேண்டும் – ரிஷாட் MP வலியுறுத்து.

“வேறொரு நாட்டின் குடியுரிமை பெற்ற இலங்கை முஸ்லிம் ஒருவர், இங்கு வந்து திருமணம் செய்ய முடியாது என்ற தடை நீக்கப்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றில் (22) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

“பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான கொண்டுவந்த இந்தப் பிரேரணையானது காலத்திற்கு தேவையான ஒன்றாகும்.

பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர்களின் வசதிகளைப் பார்க்கின்ற போது, மிகவும் மோசமான ஒரு நிலையே காணப்படுகின்றது.

திருமணப் பதிவொன்றின் கொடுப்பனவாக 1140 ரூபா மாத்திரமே வழங்கப்படுகின்றது. அதில் 240 ரூபா அரசுக்கு வழங்கினால் 900 ரூபா அளவிலேயே அவர்களுக்கு கொடுப்பனவாகக் கிடைக்கின்றது.

பிறப்புச் சான்றிதழ் பதிவாளருக்கு பிறப்புச் சான்றிதழ் ஒன்றுக்கு 75 ரூபா வழங்கப்படுகிறது.

அலுவலக பராமரிப்புக்கென மாதம் ஆயிரம் ரூபாவும், அதுவும் கொழும்பு போன்ற மாவட்டங்களில் ஆயிரம் ரூபாவும் தூர இடங்களில், கிராமப்புறங்களில் உள்ள பதிவாளர்களுக்கு 700 ரூபாவும் வழங்கப்படுகிறது. காகிதாதிகள், உபகரணங்கள் செலவுக்கு மாதம் ஒன்றிற்கு 5௦௦ ரூபாவே பதிவாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

தற்போதைய வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடும்பொழுது இந்தக் கொடுப்பனவுகள் மிகவும் சொற்பளவிலேயே இருக்கின்றன. இவற்றைக் கவனத்திற்கொண்டு மேற்படி கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

அதேபோன்று, உதாரணமாக கம்பஹா போன்ற மாவட்டங்களில் உள்ள ஒரு திருமணப் பதிவாளர் கொழும்புக்கு வந்து ஒரு திருமணப் பதிவைச் செய்யும் போது, பல இன்னல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. குறித்த பதிவாளர் கொழும்பில் உள்ள பதிவாளர் நாயக திணைக்களத்துக்குச் சென்று அனுமதியைப் பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இதனால் பல நாட்களை செலவிட வேண்டிய துர்ப்பாக்கியம் அவருக்கு ஏற்படுகின்றது.

அவருக்கு 4000 ரூபா கொடுப்பனவு கிடைக்கின்ற போதும், அவர் பல நாட்கள் நேரவிரயம் செய்ய வேண்டிய சூழ்நிலையும் உருவாகின்றது. எனவே, இந்தப் பதிவை ஆன்லைன் முறையில் செய்ய முடியும்.

ஏனெனில், தற்போதுள்ள தொழில்நுட்ப வசதி அதற்கு ஏதுவாக இருக்கும். இவ்வாறான முறைமை பின்பற்றப்பட்டால் பதிவாளர்களுக்கு தமது காரியங்களை நிறைவேற்ற இலகுவாக இருக்கும். இதன்மூலம் செலவு மற்றும் நேரம் மட்டுப்படுத்தப்படுகின்றது.

அதேபோன்று, வெளிநாட்டில் உள்ள இலங்கையர், குறிப்பாக முஸ்லிம் ஒருவர், அந்த நாட்டின் குடியுரிமையைப் பெற்றுவிட்டார் என்றால் அவர் மீண்டும் நமது நாட்டுக்கு வந்து திருமணம் செய்வதற்கு அதாவது, திருமணப் பதிவை மேற்கொள்வதற்கு தடைகள் இருக்கின்றன.

இலங்கையில் வாழும் ஒரு முஸ்லிம் பெண்ணை, வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற முஸ்லிம் ஒருவர் இங்கு வந்து திருமணம் செய்வதற்கு பல சிரமங்கள் உள்ளன.

இது முஸ்லிம்களுக்கு மாத்திரம் பிரயோகிக்கப்படுகின்ற தடையாகவே காணப்படுகின்றது. அவ்வாறான ஒருவர் திருமணப் பதிவை மேற்கொள்வதாக இருந்தால் இந்தியாவுக்கோ அல்லது வேறொரு நாட்டுக்கோ அந்த மணப்பெண்ணை வரவழைத்து திருமணம் செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இதன் மூலம் நமது நாட்டுப் பணமும் விரயமாகின்றது. எனவே, இது தொடர்பில் அக்கறை எடுத்து, இந்தச் சட்டத்தில் ஆக்கபூர்வமான திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.  

2013ஆம் ஆண்டில் ஒரு சுற்றுநிருபம் வெளியானது. அந்த சுற்றுநிருபத்தில் திருமணப் பதிவுக்கு “இலங்கை முஸ்லிமாக இருக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, ஐரோப்பா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியுரிமை பெற்ற இலங்கை முஸ்லிம் ஒருவர், இங்கு வந்து திருமணம் செய்ய முடியாத நிலையைக் கருத்திற்கொண்டு இந்தத் தடை நீக்கப்பட வேண்டும். ஏனைய மதத்தினருக்கு இவ்வாறான தடைகள் இல்லை. எனவே, முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தத் தடையை நீக்குமாறு வேண்டுவதுடன், இலங்கையில் வாழும் பெண்களின் அடிப்படை உரிமையும் இதனால் மீறப்படுகின்றது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்” என்றார்.

ஊடகப்பிரிவு.

…………………………………………………

📍Notice

 SKY TAMIL NEWS WHATSAPP CHANNEL யில் இணையுங்கள்.

நீங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணைவதால் ஒருவரின் வட்ஸ்அப் இலக்கம் மற்றவர்களும் காண்பிக்காது, இதனால் தேவையற்ற பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டி ஏற்படாது.

இன்றே இணையுங்கள்⬇️

https://whatsapp.com/channel/0029Va9VBPw2phHMWeXcSM21

…………………………………………………

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button