நாட்டில் உணவுப்பற்றாக்குறை அதிகரிக்கும் அபாயம்!

நாட்டில் வெளிப்படையான பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அதிகரித்துள்ள போதிலும், 62 சதவீதமான குடும்பங்கள், முன்னைய சேமிப்பை பயன்படுத்துதல், கடன் வாங்குதல் மற்றும் கடனில் உணவை கொள்வனவு செய்தல் போன்ற உத்திகளைக் கடைப்பிடிப்பதாக யுனிசெப் அமைப்பு தனது அண்மைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கடந்த வருடம் மே மாதத்தில் 48 சதவீதமான குடும்பங்கள் இவ்வாறான உத்திகளைப் பயன்படுத்திய நிலையில் தற்போது இந்த வீதம் 62 ஆக உயர்வடைந்துள்ளதாக அவ்வமைப்பு அறிக்கை ஊடாக சுட்டிக்காட்டியுள்ளது.

இவற்றில் 26 வீதமான குடும்பங்கள் உற்பத்திகளை மேற்கொள்ள கூடிய (வருமானத்தை தரக்கூடிய) சொத்துக்களை விற்பனை செய்தல், அத்தியாவசிய உணவு மற்றும் சுகாதார தேவைகளை குறைத்தல், குழந்தைகளை பாடசாலை கல்வியில் இருந்து முழுவதுமாக விலக்குதல் மற்றும் காணிகளை விற்பனை செய்தல் போன்ற உத்திகளை பயன்படுத்துவதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய நிலை குறித்து அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது.

தற்போது இலங்கையில் மிதமான உணவு பாதுகாப்பு நெருக்கடியில் 3.9 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளது 10000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையான உணவு பாதுகாப்பு பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளது. சுமார் 2.9 மில்லியன் குழந்தைகளுக்கு உயிர் வாழ்வதற்கான ஊட்டச்சத்து, சுகாதாரம், கல்வி, குடிநீர் மற்றும் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு சேவைகளைப் பெறுவதற்கான மனிதாபிமான உதவி தேவையாக உள்ளது. கடந்த வருடம் ஏப்ரலில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் எடை குறைந்த குழந்தைகளின் வீதம் 13.1 ஆக காணப்பட்டது. இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இந்த வீதம் 15.8 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேநேரம் வறட்சி நிலைமைகள் எதிர்வரும் சிறுபோக விவசாயத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஏற்கனவே ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 45,000 ஏக்கர் பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நெற்பயிர்ச்செய்கை கடுமையான வறட்சியால் அழிவடையும் அபாயத்தில் உள்ளது. இந்த கடும் வறட்சியினால் அறுவடை பாதிக்கப்படுவதானது அரிசியின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் அதிகரிக்க வழிவகுக்கும் என்பதோடு, இது நாட்டில் தற்போதுள்ள உணவுப் பற்றாக்குறையை மேலும் அதிகப்படுத்த கூடும் என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் யுனிசெஃப் அமைப்பின் ஊடாக இந்த வருடத்தின் முதல் பகுதியில் 360,941 குழந்தைகள் உட்பட 647,900 பேருக்கும் அதிகமானோருக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் 70,571 குடும்பங்களுக்கு மனிதாபிமான பணப் பரிமாற்றங்கள் சென்றடைந்துள்ளதாக அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button