புதிய கிராமம் – புதிய நாடு தேசிய செயற்திட்டம் – பிரதமர் இன்று அம்பாறை விஜயம்.

“புதிய கிராமம்-புதிய நாடு” தேசிய ஒருங்கிணைந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அம்பாறை மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று (4) அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றபோது பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக்கூட்டம் பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்காக கிராமப்புற பொருளாதார மறுமலர்ச்சி மையங்களை மேம்படுத்துவதற்கான பல்துறை ஒருங்கிணைந்த பொறிமுறை குறித்து ஆராயப்பட்டது.

மேலும் அம்பாறை பிரதான பிரச்சினைகள் தொடர்பில் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.

அத்தோடு நெல் கொள் முதல் வேலைத்திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் விவசாயிகளுக்குரிய உரமானியத்திற்கான பவுச்சர்கள் வழங்கும் நடைமுறையில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

உரமானியத்திற்கான பவுச்சர்கள் உரிய காலத்தில் கிடைப்பதன் மூலமே விவசாய நெற் செய்கையை சிறப்பாக மேற்கொள்வதுடன் அதிக விளைச்சலையும் பெற்றுக்கொள்ள முடியும் என்று மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை பிரதமர் ஏற்றுக்கொண்டதுடன் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் இங்கு பிரதமர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.அதாஉல்லா, விமல வீர திஸாநாயக்க, டபிள்யூ. வீரசிங்க, எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசீம், திலக் ராஜபக்ஸ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள்,மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

– பாறுக் ஷிஹான்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button