ஆறு மாதத்துக்குள் புதிய சட்டம் – ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள பணிப்புரை

மக்களின் நல்வாழ்வை பாதுகாக்கும் வகையில் புதிய மருத்துவ சட்டமூலத்தை ஆறு மாதங்களுக்குள்தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, தற்போதுள்ள மருத்துவக் கட்டளைச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளைத் தவிர்த்து, சிறந்த சுகாதார சேவையையும், பொது நலனையும் உறுதி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுகாதார சேவையை மேம்படுத்துவது மற்றும் சுகாதார சேவைக் கட்டமைப்பை பலப்படுத்துவது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற பின்னாய்வுக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

அதேவேளை, எதிர்வரும் மூன்று மாதங்களுக்குப் போதுமான அவசர மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 30 பில்லியன் ரூபா மேலதிக நிதியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

மருந்து விநியோகம் மற்றும் ஆவணப்படுத்தல் முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டதுடன், இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம், மருந்து வகைகளை மருத்துவமனைகளுக்கு விநியோகிப்பது தொடர்பில் உடனடி தகவல் வழங்கும் வகையில் இணையவழி முறைமையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் அதிபர் இதன் போது வலியுறுத்தினார்.

அதேவேளை, தரமான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான எளிய மற்றும் வெளிப்படையான கொள்முதல் செயல்முறையை தயாரிப்பதற்காக திறைசேரி பிரதிச் செயலாளர் ஏ.கே.செனவிரத்ன தலைமையில் ஐவர் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டது.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button