நாடுமுழுவதும் விரைவில் மீண்டும் மின்வெட்டு – மின்சார சபை அதிர்ச்சி அறிவிப்பு!

நாடு முழுவதும் விரைவில் மீண்டும் மின்வெட்டை அறிவிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையின் கடுமையான தாக்கம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொறியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நீர்மின் உற்பத்தி நாளுக்கு நாள் குறைந்து வருவதால் விவசாயத் தேவைகளுக்காக சமனல நீர்த்தேக்கத்திலிருந்து நீர் விடுத்தால் தென் மாகாணத்திற்கு 4 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தனியார் டீசல் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் ஏனைய அனைத்து மின் உற்பத்தி நிலையங்களில் இருந்தும் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படுகிறது.

எரிபொருளின் மூலம் நாட்டின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதால், இந்த ஆண்டு இலங்கை மின்சார சபைக்கு இழப்பு 500 கோடி ரூபாயை தாண்டும் என்றும் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக தற்போது நிலவும் வறட்சி காரணமாக மின்சாரத்தை துண்டிப்பதை தவிர வேறு வழியில்லை என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதேவேளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை போதியளவு மழைவீழ்ச்சி பதிவாகாது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பருவப் பெயர்ச்சியின் போதும் போதியளவு மழை பெய்யவில்லையென திணைக்களத்தின் பணிப்பாளர் ஷிரோமனீ ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நாட்டில் தற்போது நிலவும் வறட்சி காரணமாக நீரேந்துப் பகுதிகளின் நீர்மட்டம் சடுதியாக குறைவடைந்து வருகின்றது. நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 33.3 வீதம் வரை குறைடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் சுதர்ஷனீ விதானபதிரண தெரிவித்துள்ளார்.

மகாவலி ஆற்றின் கொள்ளளவு 34 வீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக மகாவலி அதிகாரசபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் நிலந்த தனபால தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மொத்த மின் உற்பத்தியில் நீர் மின் உற்பத்தியின் பங்கு 16 வீதமாகக் குறைவடைந்துள்ளது. மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 20 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், நாளாந்த மொத்த மின் உற்பத்தியின் 64 வீதம், நிலக்கரி மற்றும் எரிபொருள் மூலமாகவே பெற்றுக்கொள்ளப்படுகின்றது. நாளாந்தம் சூரிய சக்தியின் மூலம் 5 வீதமும் காற்றாலைகளின் மூலம் 6 வீதமும் தேசிய கட்டமைப்பில் சேர்க்கப்படுகின்றது.

இந்தநிலையில், நாட்டின் மின்சாரத்திற்கான கேள்வி மணித்தியாலத்திற்கு 48 கிகாவாட்(GW) வரை அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button