பேரிச்சை ஏற்றுமதியில் உலக அளவில் சவுதி அரேபியா முதலிடம்… ஆண்டுக்கு 1.6 மில்லியன் டன் பேரிச்சம் பழங்களை உற்பத்தி செய்து சாதனை!!

சவுதி அரேபியா நாடானது 300 க்கும் மேற்பட்ட பேரிச்சம் பழ ரகங்களை உற்பத்தி செய்து, உலகளவில் பழங்களை ஏற்றுமதி செய்வதில் முதலிடம் வகிக்கிறது என்று சுற்றுச்சூழல், நீர் மற்றும் விவசாய அமைச்சகம் (MEWA) அறிவித்துள்ளது. மேலும், பேரீச்சம்பழங்களின் ஆண்டு உற்பத்தியானது 1.6 மில்லியன் டன்களைத் தாண்டி உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது, ​​2022 ஆம் ஆண்டில் ஏற்றுமதியானது 5.4% அதிகரித்துள்ளதாக MEWA தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல், மொத்த ஏற்றுமதியின் அளவு 321,000 டன்களை தாண்டியுள்ளது. இதன் மதிப்பு 1.28 பில்லியன் ரியால் ஆகும். 2016 ஆம் ஆண்டில் 578 மில்லியன் ரியால் மற்றும் 134,000 டன்களாக இருந்த ஏற்றுமதியின் அளவானது தற்பொழுது கிட்டத்தட்ட 121% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சவுதி அரேபியாவின் பேரிச்சம்பழங்களானது உலகம் முழுவதும் 111 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதற்காக சவுதி அரேபியாவில் அமைந்துள்ள கிட்டத்தட்ட 34 மில்லியன் மரங்களில் இருந்து பேரிச்சம்பழங்கள் பெறப்படுகின்றன என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

சவுதி அரேபியாவில் அல்-காசிம் பகுதியில் மொத்தம் 11.2 மில்லியன் மரங்களுடன் அதிக எண்ணிக்கையிலான பேரீச்ச மரங்கள் உள்ளன, அதைத் தொடர்ந்து மதீனாவில் 8.3 மில்லியன் மற்றும் ரியாத்தில் 7.7 மில்லியன் மரங்கள் உள்ளன, கிழக்குப் பகுதியில் (அல்-ஷர்கியா) 4.1 மில்லியன் மரங்கள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. பேரிச்சம் பழம் உற்பத்தியானது சவுதி அரேபியா நாட்டில் பிரதான விவசாயம் ஆகும். எனவே, இதன் வளர்ச்சியை மேம்படுத்தி உணவு பாதுகாப்பில் நிலையான தன்மையினை அடைய நாடு முயற்சி செய்து வருகின்றது. எனவே தான் விஷன் 2030 எனும் திட்டத்தின் இலக்குகளில், சவுதி அரேபியாவின் பேரிச்சம்பழம் மரங்களினை மேம்படுத்துவது என்பது முக்கிய குறிக்கோளாக சேர்க்கப்பட்டுள்ளது.

எனவேதான் விவசாயத்துறை மற்றும் அதை சார்ந்த தொழில் நடைமுறைகளை மேம்படுத்துவதற்கு விவசாயிகளுக்கு பல ஆதரவுகள் மற்றும் உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றது. மேலும் பேரிச்சம் பழத்தினை சந்தைப்படுத்துவதற்கு தேவையான சேவைகள் மற்றும் உதவிகளையும் அரசாங்கம் தொடர்ந்து வழங்கி வருகின்றது. மேலும் பேரிச்சம்பழ உற்பத்தினை ஊக்குவிப்பதற்கு தனியார் துறையுடன் அரசு கூட்டு சேர்ந்துள்ளது. உலகளாவிய சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப பழங்களின் தரத்தை மேம்படுத்துவதுடன், பல்வேறு வகையான பழங்களுக்கான விளம்பர தரநிலை மற்றும் விவரக்குறிப்புகளை இந்த மையம் உருவாக்குகிறது.

மேலும் பேரிச்சம்பழம் மரங்களின் வளர்ச்சியினை ஊக்குவிக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்துவதற்கான தனி குழுவினையும் அமைத்துள்ளது. மேலும் இதற்காக தனி கவுன்சில் அமைக்கப்பட்டு அதற்காக சிறப்பு கூட்டங்களும் நடத்தப்பட்டு பேரிச்சம்பழ உற்பத்தி குறித்து விவாதிக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Source : sauditamil.com

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button