இலங்கையில் முதற் தடவையாக இன்று முதல் அமுலான நியமனம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு பதில் ஜனாதிபதி செயலாளரொருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் பதில் ஜனாதிபதி செயலாளராக சிரேஷ்ட அரச உத்தியோகத்தரான திருமதி சாந்தனி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி பதில் செயலாளராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டமை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

சிரேஷ்ட அரச அதிகாரியான சாந்தனி விஜேவர்தன தற்போது ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளராக கடமையாற்றி வருகின்றார்.1994 ஆம் ஆண்டு இலங்கை திட்டமிடல் சேவையில் இணைந்து கொண்ட திருமதி விஜேவர்தன, திறைசேரியில் 22 வருடங்களாக பல்வேறு பதவிகளை வகித்து வந்ததோடு இறுதியாக திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றினார்.

2015 முதல் 2019 வரை அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் செயலாளராகவும் சாந்தனி விஜேவர்தன பணியாற்றியுள்ளார்.

காலி சவுத்லண்ட் பெண்கள் கல்லூரியின் பழைய மாணவியான இவர், ருஹுணு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தில் முதுமானிப் பட்டம் பெற்றுள்ளதோடு நெதர்லாந்தின் ஹேக் நகரில் பிராந்திய பொருளாதார அபிவிருத்தி தொடர்பான பட்டப்பின் படிப்பை பூர்த்தி செய்துள்ளார்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button